மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் நிரம்பிய சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்துள்ளது. இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. தொடர் கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்கள் வெள்ளநீர் சூழ்ந்தது. வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிக்கரணை, முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வெளியேற முடியாமல் தத்தளிக்கும் மக்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் சென்று மீட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கனமழையால் நிரம்பிய சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் கரை செவ்வாய்க்கிழமை உடைந்தது. இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளதால் அங்கே வசிக்கும் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.நாராரயணபுரம் ஏரிக்கரை உடைந்ததில், ஏரியில் இருந்து வெளியேறி பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீரால் தண்ணீர் வேளச்சேரி - தாம்பரம் சாலை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால், பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு, உடைமைகளை விட்டுவிட்டு வெளியேறி வருகின்றனர்.
கீழ்கட்டளை ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி, வடக்குப்பட்டி ஏரி, நாராயணபுரம் ஏரி அகிய எல்லா ஏரிகளுக்கும் இடையே ஒரு இணைப்பு உள்ளது. திங்கள்கிழமை பெய்த கனமழையால், மேற்குறிப்பிட்ட அனைத்து ஏரிகளுமே அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்நிலையில், நாராயணபுரம் ஏரியின் கரை உடைந்ததால் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் பள்ளிக்கரணையில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால், வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் வெளியேற முடியாமல் சிக்கித் தவிப்பவர்களை படகுகள் இயக்கப்பட்டு அதன் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பாக மீட்கப்பட்டு வெளியேற்றப்படும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்லாவரம் - துரைப்பாக்கத்தை இணைக்கும் சாலையிலும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கரை உடைப்பால் வெளியேறிய வெள்ளநீரால் சூழ்ந்துள்ளது. இதனால், பள்ளிக்கரணை பகுதியே ஒரு தனித் தீவு போல காட்சி அளிக்கிறது.