செங்கல்பட்டு அருகே தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன என்று தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரியா தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், ரயிலின் 10-க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது.
இந்நிலையில், தண்டவாளத்தை சீரமைத்து ரயில் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தென்மாவட்டங்களில் சென்னை நோக்கி செல்லும் பயணிகள் ரயில்களின் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.இந்நிலையில், தடம் புரண்ட சரக்கு ரயிலின் பெட்டிகளை மீட்கும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றன என்றும், இன்னும் 2 மணி நேரத்தில் மீட்கப்பட்டு வழக்கம்போல இரயில்கள் இயக்கப்படும் என்றும் தென்னக ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈரியா தெரிவித்துள்ளார்.