பிரபாகரன் மகள் துவாரகா வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவ.27ஆம் தேதி மாவீரர் தினத்தில் பிரபாகரன் மகள் துவாரகா பேசியதாக காணொலி ஒன்று வெளியானது. அதில் உள்ள பெண் பிரபாகரனின் மகள் அல்ல என நாடு கடந்த தமிழீழ அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், “துவாரகா வீடியோவில் நம்பகத்தன்மை இல்லை; அவர் பேசியதாக வெளியான வீடியோவை முழுமையாக புறக்கணிக்கிறோம்.
கிடைக்கப் பெற்ற நம்பகமான தகவல் மற்றும் எங்களின் ஆய்வு அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். பிரபாகரனின் குடும்ப உறுப்பினர் எனக் கூறி இல்லாத ஒருவரை காட்டுவது வேதனை தருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், “பிரபாகரனையும், அவர் குடும்பத்தினரையும் உலகத் தமிழ் மக்கள் தங்களின் இதயங்களில் அன்போடும், மதிப்போடும் வைத்திருக்கிறார்கள்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நேற்று (நவ.27) நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய முதுபெரும் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.அப்போது பிரபாகரன் மகள் துவாரகா என்பவரின் காணொலி வெளியிடப்பட்டது. இந்தக் காணொலியில் தோன்றிய துவாரகா சுமார் 10 நிமிடங்கள் வரை உரையாற்றியிருந்தார்.
அப்போது, “பல்வேறு சவால்கள், ஆபத்துக்களை தாண்டி நாங்கள் உங்கள் முன் பேசுகிறேன். நாம் சிங்களத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அரசியல் ரீதியாக தமிழீழ விடுதலைக்கு தொடர்ந்து பயணிப்போம்.
சிங்கள அரசு தனித்து நின்று போர் புரிய திராணி அற்றது. அங்கு, தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. சீர்கேடுகள் அரங்கேறி வருகின்றன” என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.