குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சுற்றுலா செய்தனர்.அப்போது படகு சவாரி செய்த போது, படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவ-மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) தகவலின்படி, சம்பவத்தின் போது படகில் சுமார் 27 பேர் இருந்துள்ளனர். இதில், 19 குழந்தைகள் மற்றும் 4 ஆசிரியர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மாயமான 4 குழந்தைகளைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இறந்தவர்கள் முகமது அயன் அனீஸ் காந்தி (13), ரோஷ்னி ஷிண்டே (10), ருத்வி ஷா (10), ஜஹாபியா முகமது யூனுஸ் சுபேதார் (10) மற்றும் இரண்டு ஆசிரியர்கள் ஆவார்கள். அவர்கள், ஃபல்குனி படேல், சாயா சுர்தி ஆவார்கள். வதோதரா அவசர மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் (விஎம்சி), காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அதுல் கோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தேடுதல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வதோதராவில் உள்ள ஹர்னி ஏரியில் படகு கவிழ்ந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. விபத்தில் உயிரிழந்த அப்பாவி குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இந்த நேரத்தில் வேதனையில் வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் சிகிச்சையை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.