பொங்கல் பண்டிகையின்போது, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில், புதிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாளை முதல் பொங்கல் பண்டிகை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் பணியாற்றும் பலரும் பொங்கல் விடுமுறைக்காக தங்களது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை தவிர்க்கும் வகையில், செங்கல்பட்டு பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடியில், அந்தந்த பாதைகளில் போக்குவரத்தைப் பிரிப்பதற்கும், அதிக ஸ்கேனர்கள் மற்றும் கையடக்க பிஓஎஸ் இயந்திரங்களைப் பெறுவதற்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) டோல் ஆபரேட்டர்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்பிரச்னை குறித்து விவாதிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில், சமீபத்தில் கூட்டம் நடைபெற்ற நிலையில், பொங்கல் விடுமுறைக்காக சென்னை நகரத்தை விட்டு வாகனங்கள் இயக்கத் தொடங்கியதால், நேற்று (சனிக்கிழமை) தேசிய நெடுஞசாலை முழுவதும் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை எளிதாக்கும் வகையில், பரனூரில் கட்டப்பட்டு வந்த ரயில் மேம்பாலமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "மழை காரணமாக, மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டது. இருப்பினும், நாங்கள் மேல் கோட் போட்டுக்கொண்டு இரவு முழுவதும் உழைத்து, விபத்து தடுப்புகளை நிறுவி, வெள்ளிக்கிழமை இரவு மேம்பாலத்தை போக்குவரத்துக்கு திறந்துவிட்டோம், ”என்று கூறியுள்ளார்.
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றதால், சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக இருந்தது. குறிப்பாக “பரனூர் பிளாசாவில் போக்குவரத்து பாதிப்பு அதிகமாக உள்ளது. வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு சுமார் 40,000 வாகனங்களைப் பார்க்கிறோம். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இது அதிகமாக இருந்தது. இங்கிருந்து கடந்து செல்லும் கார்கள் மற்றும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்தாததால் நாங்கள் அவற்றைக் கணக்கிடுவதில்லை, ”என்று சுங்கச்சாவடியில் உள்ளவர்கள் கூறியுள்ளனர்.