“தேசியக் கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது எனக் கூறுவது நகைப்புக்குரியது; தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை" என மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க வில்லை என அறிக்கை வெளியாகி உள்ளது.
அந்த அறிக்கையில், "தேசியக் கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு அரசு செயல்படுகிறது எனக் கூறுவது நகைப்புக்குரியது; தமிழ்நாடு அரசு செய்ததை, செய்து கொண்டிருப்பதை தேசிய கல்விக்கொள்கையில் இணைத்துள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும், “தேசியக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்கு என சொல்லப்பட்ட பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது” எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்; அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் வாய்ப்பு இல்லை.பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும்” எனக் கூறப்பட்டுள்ளது.தேசிய கல்விக் கொள்கை 2020ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தேசிய கல்விக் கொள்கைக்கு இந்தியா கூட்டணி மாணவர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த அமைப்பினர், தேசிய தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜன.12,2024) எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.