ஜன.9-ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்ககத்தினர் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககத்தினர் வரும் ஜனவரி 9-ம் தேதி போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்ககத்தினர் உடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்ககத்தினர் அறிவித்தனர். தொடர்ந்து போராட்டம் குறித்து போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், துறை செயலாளருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று (ஜன.6)பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜன.7) மீண்டும் தொழிற்சங்கங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம், அதுவரை போராட்ட முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மீண்டும் தெரிவித்தனர். இந்நிலையில், வருகிற 9-ம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு வராவிடில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.