அரசு விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நாளை (நவ.12) தீபாவளிப் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் மக்கள் பண்டிகையை கொண்டாடுவர். அந்த வகையில் தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிகப்பட்டுள்ளது.காலை 6-7 மணி வரையிலும், இரவு 7-8 மணி வரையிலும் என 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்க எடுக்கப்படும், வழக்குப் பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி கொண்டாட்டம் இன்று இரவு முதல் தொடங்குவதால் சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பு, பட்டாசு வெடிப்பது தொடர்பான விதி மீறலை கண்காணிக்க போலீஸ் நிலையங்களில் தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த குழுவில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 2 போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு விதி மீறலை கண்காணிப்பர். குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதால் இடையூறாக இருப்பதாக யாராவது புகார் செய்தால் இந்த குழு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கும். அனைத்து காவல் நிலைய எல்லைப்பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.