தீபாவளி போனஸில் ஊழியர்கள் அனுமதியின்றி பிடித்தம்; தமிழக அரசு, போக்குவரத்து கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் தீபாவளி போனஸில் அனுமதியின்றி பிடித்தம் செய்ய தடைவிதிக்க கோரி தொடரப்பட்ட மனு மீது தமிழக அரசு மற்றும் போக்குவரத்து கழகங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையைச் நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் அன்புராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், போக்குவரத்து கழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஒப்புதலுடன், மாதாந்திர ஊதியத்திலிருந்து சங்கத்தின் சந்தா தொகை பிடித்தம் செய்யப்பட்டு, தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படும் நடைமுறை அமலில் உள்ளது.
ஆனால் தீபாவளி பண்டிகையையொட்டி வழங்கப்படும் ஊழியர்களின் வருடாந்திர போனஸ் தொகையிலும் தொழிற்சங்கங்களுக்காக பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. எனவே ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்ததற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஆர்.ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், வருடாந்திர போனஸ் தொகையிலும் தொழிற்சங்கங்களுக்கு பணம் பிடித்தம் செய்யப்படுவதால் தொழிலாளர்கள் பண்டிகைக்காக கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்று வாதிட்டார்.இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசு, போக்குவரத்து கழகங்களும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.