புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால், சேப்பாக்கம் தொகுதியில் நள்ளிரவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.சென்னையில் இருந்து 130 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது மிக்ஜாம் புயல். கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. முன்னதாக 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது வேகம் சற்று அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் மிக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் நள்ளிரவில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்பு அவர் பேசியதாவது ” புயல் இந்த முறை தீவிரமாக இருப்பதால், மிக அதிகமாக மழை பெய்து வருகிறது. என்னுடைய சேப்பாக்கம் தொகுதியில் கடந்த ஆண்டு எங்கெல்லாம் தண்ணீர் நின்றதோ அங்கு நிற்கவில்லை. தற்போது வேறு இடங்களில் தண்ணீர் நிற்கிறது. தொடர் மழை பெய்வதால் மட்டுமே தண்ணீர் நிற்கிறது.
1 மணி நேரம் மழை பெய்யாமல் இருந்தால், எல்லா நீரும் வடிந்துவிடும். மோட்டார் மற்றும் லாரியை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். மழை நிற்கும் வரை அனைத்தும் சவாலாகத்தான் இருக்கும். மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம். சென்னை மாநகராட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. எல்லா இடத்திற்கும் சென்று மேயர் பிரியா ஆய்வு செய்கிறார். என்னோடும் சேர்ந்து பணியில் ஈடுபட்டார். எதிர்கட்சிகள் விமர்சனங்கள் பற்றி மழை முடிந்த பிறகு பேசுவோம்” என்று அவர் கூறினார்.