சோனியா, ராகுல் தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனத்தின் டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நேஷனல் ஹெரால்டு வழக்கின் பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் (ED) செவ்வாய்க்கிழமை (நவ.21) முடக்கியது.

இது குறித்து அமலாக்கத் துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “PMLA, 2002-ன் கீழ் விசாரிக்கப்பட்ட பணமோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதில், டெல்லி, மும்பை மற்றும் லக்னோ போன்ற நகரங்களில் உள்ள அசையா சொத்துக்கள் ரூ. 661.69 கோடி மற்றும் யங் இந்தியா நிறுவனத்தின் ரூ. 90.21 கோடி பங்குகள் ஆகியவை அடங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.2013 ஆம் ஆண்டு டெல்லி நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். அந்தப் புகாரில் காந்தியடிகள் செய்தித்தாள் வாங்கியதில் மோசடி மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்த வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு விசாரணை நீதிமன்றம் 2015 டிசம்பரில் ஜாமீன் வழங்கியது.
மேலும், ஏஜேஎல் காங்கிரஸுக்கு செலுத்த வேண்டிய ரூ.90.25 கோடியை திரும்பப் பெறுவதற்கான உரிமையைப் பெறுவதற்காக யங் இந்தியனுக்கு ரூ. 50 லட்சம் கொடுத்ததாகக் கூறி, சோனியா, ராகுல் மற்றும் பலர் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுவாமியின் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.