ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணியுடன் மோத உள்ளது. 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடர் இந்திய மண்ணில் நடைபெறுகிறது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஜனவரி 2024 தொடக்கத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்துகிறது. மூன்று டி20 போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன.மூன்று போட்டிகள் கொண்ட டி20I தொடரின் முதல் போட்டி ஜனவரி 11 ஆம் தேதி மொஹாலியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே ஜனவரி 14 மற்றும் 17 ஆம் தேதி இந்தூர் மற்றும் பெங்களூருவிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் பல்வேறு ஆசிய கோப்பை (ஏ.சி.சி) மற்றும் ஐ.சி.சி போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இவ்விரு அணிகள் வெள்ளை-பந்து தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும்." என்று தெரிவித்துள்ளது.அண்மையில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் நடைபெற்ற ஐ.சி.சி உலகக் கோப்பை தொடரில் கலந்து கொண்டது. இந்த தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக மறக்கமுடியாத வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.