திமுகவின் தற்போதைய தலைமை வருங்கால தலைமையை உருவாக்கினால், வருங்கால தலைவரையும் தோள் மீது வைத்து தாங்குவேன் என அக்கட்யின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அடுத்துள்ள கரூர் பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இதனைத் தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற பல்வேறு அணிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், 100 அடி உயர கொடிக் கம்பத்தை முதன்முதலில் இங்குதான் பார்த்தேன். ஆயிரம் கொடிகள் இருந்தாலும் பட்டொளி வீசி பறக்கும் திமுக கொடிக்கு தனி சிறப்புண்டு. நாம் ஊனும் உறவுமாக கருதும் கலைஞரின் ரத்தத்தில் உருவானது திமுக கொடி. மாநாடு ஒன்றில் திமுக கொடி குறித்து பேசும்போது எனக்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்தது. சட்டமன்றத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்த ஒரு குறிப்பும் கையில் வைத்துக் கொள்ளாமல் உரையாற்றியது, வருங்கால திமுகவிற்கு நல்ல ஒரு தலைவன் கிடைத்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த திமுக உனக்கென்று தனி இடம் இருக்கும். உனக்கென்று ஒரு நாடு இருக்கும் என வாழ்த்தினார். ஒட்டு மொத்த திமுக விற்கும் தலைமையாக விளங்கியது திருச்சி தான். தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி தான் தலை நகரமாக இருக்க வேண்டும். தொண்டன் தான் கட்சியின் உயிர் நாடி. திமுகவிற்கு வந்த சோதனை போல் மற்ற கட்சிகளுக்கு வந்திருந்தால் அந்த கட்சிகள் அழிந்து காணாமல் போயிருக்கும்.
திமுக தொண்டர்கள் கட்சியின் காவல் தெய்வங்கள். திமுக ஆட்சி செய்த காலத்தை விட வெளியில் இருந்த காலங்கள் அதிகம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் இருந்தாலும் எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய ஒரே கட்சி திமுக தான். தற்போதைய திமுக தலைமை வருங்கால தலைமையை உருவாக்குமானால் அந்த தலைவரையும் எனது தோள் மீது வைத்து தாங்குவேன் எனக் கூறினார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே என் சேகரன், திருச்சி மாமன்ற உறுப்பினரும் மாநகர கழக செயலாளருமான மதிவாணன், திருச்சி மாநகர துணை மேயர் திவ்யா மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.