பி.கே.எல் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணியை அகமதாபாத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி எதிர்கொள்கிறது. 10வது புரோ கபடி லீக் (பி.கே.எல்) தொடர் வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல் தொடங்குகிறது. ஐ.பி.எல் தொடரைப் போலவே சொந்த மைதானம் மற்றும் எதிரணியின் மைதானம் என 12 அணிகள் மோதும் இந்த தொடர் 12 நகரங்களில் நடைபெற உள்ளது.
இந்த தொடருக்கான தொடக்க ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்க உள்ளது. பி.கே.எல் தொடருக்கான தமிழ் தலைவாஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் தபாங் டெல்லி கே.சி. அணியை அகமதாபாத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்காக தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் பயிற்சியாளர் அஷான் குமார் தலைமையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ் தலைவாஸ் புதிய கேப்டன்
தமிழகத்தின் சென்னையை தளமாகக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணி 5வது பி.கே.எல் தொடரில் அறிமுகமானது. அந்த சீசனில் பலத்த பின்னடைவை சந்தித்து இருந்தனர். அதன்பிறகு நடந்த நடந்த 3 சீசன்களிலும் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை தான் தலைவாஸ் அணி பிடித்தது.
ஆனால், கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட அணி பயிற்சியாளர் அஷன் குமாரின் தலைமையில் முதன்முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இருப்பினும், அரையிறுதியில் போராடி தோல்வியுற்றது. இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் தமிழ் தலைவாஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பி.கே.எல் தொடருக்கான 10-வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணியின் புதிய கேப்டனாக சாகர் ரதி நியமிக்கப்பட்டார். அஜிங்க்யா பவார் மற்றும் சாஹில் கிலியா ஆகியோரை துணை கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்னர்.
கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட சாகர் கடைசி இரண்டு சீசன்களில் அணியின் முக்கிய டிஃபன்ஸ் வீரராக இருந்துள்ளார். ரைட் கார்னர் வீரரான ரதி கடந்த சீசனில் 17 போட்டிகளில் விளையாடி 53 புள்ளிகளைப் பெற்றார். அவர் கடந்த சீசன் முழுவதும் காயமின்றி இருந்திருந்தால் அதிக புள்ளிகளைப் பெற்றிருக்க முடியும்.இந்த சீசனுக்கு முன்னதாக ரதி தனது உடற்தகுதியில் தீவிரமாக பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டார்.