வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.
இந்தநிலையில், தமிழக அரசு பல்வேறு மீட்பு பணிகளை செய்து வருகிறது. அந்தவகையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருநெல்வேலியில் அதிகாரிகளைச் சந்தித்து, மழை வெள்ள பாதிப்புகளைக் குறித்து கேட்டறிந்தார். அப்போது மழை பாதிப்பு, மீட்பு பணிகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பொழிவு காலை முதல் பெய்துள்ளது. நெல்லை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, காவல்துறை தீயணைப்பு துறை உள்ளிட்டோர் இணைந்து பேரிடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.
அப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, மழை இன்று மாலை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியர் விடுமுறை குறித்து அறிவிப்பார் என்று கூறினார்.