கடந்த 25 ஆண்டுகளாக தனக்கு மேனேஜராக பணியாற்றி வந்தவர் திடீரென மரணமடைந்துவிட்டதாக நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 1997-ல் பிரபு தேவா நடிப்பில் வெளியான விஐபி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிம்ரன். தொடர்ந்து, விஜய் அஜித், சரத்குமார், விஜயகாந்த், அப்பாஸ், பிரஷாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அஜித்துடன் நடித்த வாலி, அவர் வருவாளா, விஜயுடன் துள்ளாத மனமும் துள்ளும் என மெகாஹிட் படங்களை கொடுத்த சிம்ரன் சினிமா வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து நடிப்பில் இருந்து விலகினார்.
கடைசியாக கேப்டன் என்ற படத்தில் நடித்திருந்த சிம்ரன் தற்போது தமிழில் தனது 50-வது படமாக சப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சிம்ரன் தன்னிடம் 25 ஆண்டுகளாக மேனேஜராக பணியாற்றி வந்த எம்.காமராஜன் என்பவர் திடீரென மரணமடைந்துவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு நம்பமுடியாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. என் அன்பு நண்பர் திரு.எம்.காமராஜன் இப்போது இல்லை. 25 வருடங்களாக என் வலது கை, என் ஆதரவு தூண். எப்பொழுதும் புன்னகையுடன், கூர்மையாக, நம்பகத்தன்மைக்கு ஒத்ததாக இருந்த ஒருவர். ஒரு உறுதியான மனிதன். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் சாத்தியமில்லை. என் வாழ்க்கை உண்மையிலேயே பலருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நீங்கள் சீக்கிரம் சென்றுவிட்டீர்கள். உங்கள் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் சிம்ரனின் பதிவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.விக்ரமின் நீண்ட கால தாமதமான துருவ நட்சத்திரம் படத்தில் நடித்துள்ள சிம்ரன், நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இந்தி படமான அந்தாதூன் தமிழ் ரீமேக்கான அந்தகனில் இருந்து இந்தியில் தபு நடித்த கேரக்டரில் தமிழில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரஷாந்த் நாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.