ஜனவரி 26ஆம் தேதி 1950ஆம் ஆண்டு அரசியலைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதை நாம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு வரும் 26ஆம் தேதி நாட்டின் 75ஆவது குடியரசு தினம் என்பதால் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்த நாள் இந்தியா முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லியில் உள்ள ராஜ பாதையில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் அணிவகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்தியாவின் முப்படைகளிலும் புதிதாக பயன்பாட்டுக்கு வரவுள்ள ஏவுகணைகள், விமானம் மற்றும் ஆயுத அமைப்புகளின் அணிவகுப்பு நடைபெற்று இந்தியாவின் பாதுகாப்பு திறன் வெளிகாட்டப்படும். அதே போல இந்தியாவில் உள்ள மாநிலங்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். விமானப்படை சார்பாக வானில் சாகச நிகழ்வுகளும் அரங்கேறும். எனவே பிரமாண்டமான குடியரசு தின கொண்டாட்டத்தை நீங்கள் நேரில் காண விரும்பினால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் டிக்கெட்டுகளை பெறுவது எப்படி என்ற விவரங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
2024ஆம் ஆண்டு குடியரசு தினத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு கடந்த 10ஆம் தேதி தொடங்கிவிட்டது. 25ஆம் தேதி வரை டிக்கெட் பெறலாம். மொத்த எண்ணிக்கையை பொறுத்து தினமும் டிக்கெட் விற்கப்படும். விழாவை காண ஏராளமான மக்கள் விரும்புவார்கள் என்பதால் டிக்கெட் வாங்குவது எளிதான காரியமல்ல கடும் போட்டி இருக்கும்.