ஆவின் ஊதா நிற டிலைட் பால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மாதாந்திர பால் அட்டை மூலம் வழங்கப்படும் எனஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஆவின் நிறுவனம் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக 90 நாள்கள் வரை கெடாத புதிய ‘ஆவின் டிலைட்’ எனும் பால் பாக்கெட்டை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
பச்சை நிற பால் பாக்கெட் 4.5 சதவீத கொழுப்பு சத்தை கொண்டது. ஆனால் புதிய ரக ஆவின் டிலைட் பால் 3.5 சதவீத கொழுப்பு சத்து மட்டுமே கொண்டுள்ளது.பசும்பாலான இது கெடாமல் இருப்பதற்காக, எந்தவித ரசாயனமும் சேர்க்கவில்லை. இதை ஃபிரிட்ஜில் வைக்க தேவையில்லை.
மழைக் காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைத்திட ஆவின் டிலைட் மிகப் பெரிய பங்காற்றும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் இன்று ஆவின் நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு ஆவின் ஊதா நிற டிலைட் பால் பாக்கெட் வழங்கப்படும். 3.5 சதவீத கொழுப்புடன் கூடிய இந்த அரை லிட்டர் ஆவின் டிலைட் பால் ரூ.21க்கு விற்பனை செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.