வேலுர் விஜடி பல்கலைகழகத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் விஐடி தனியார் நிகர்நிலை பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது. 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வரும் இந்த பல்கலை கழகத்தின் மீது நீர்நிலை ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அதே சமயம் சென்னை மற்றும் போபால் என சில பகுதிகளில் விஐடி பல்கலைகழகம் செயல்பட்டு வருகிறது.
இதனிடையே இன்று வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர்கள் பல்லைகழகத்தின் இமெயில் முகரியில் தகவல் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பல்கலைகழக நிர்வாகிகள், உடனடியாக வேலூர் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக பல்கலைகழகத்தின் வளாகத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் 10 பேர் கொண்ட 6 குழுக்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சோதனை காரணமாக மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான தகவல்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.