இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் முகமது முய்ஸு வெற்றி பெற்றார். அவர் அதிபராகச் சமீபத்தில் பதவியேற்ற நிலையில், பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு, மாலத்தீவில் தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் முறைப்படி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, மாலத்தீவில் இருந்து ராணுவ வீரர்களை வாபஸ் பெற இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக அதிபர் முகமது முய்ஸு கடந்த 3ம் தேதி தெரிவித்தார்.
இந்த நிலையில், மாலத்தீவில் இருந்து தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்தியாவைக் கேட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், அதிபர் முகமது முய்ஸு தலைமையிலான மாலத்தீவு அரசு நீர்நிலைகளின் ஆய்வு நடத்தும் ஹைட்ரோகிராஃபிக் கணக்கெடுப்பு தொடர்பான இந்தியாவுடனான முந்தைய அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
ஹைட்ரோகிராஃபிக் கணக்கெடுப்பு என்பது கடல் வழிசெலுத்தல், கடல் கட்டுமானம், அகழ்வாராய்ச்சி, கடல் காற்றாலைகள், கடலுக்கடியில் எண்ணெய் ஆய்வு மற்றும் தோண்டுதல் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளை பாதிக்கும் அம்சங்களின் அளவீடு மற்றும் விளக்கத்தின் அறிவியல் ஆகும்.கடந்த ஜூன் 8, 2019 அன்று, பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவுக்கு விஜயம் செய்தபோது, அப்போதைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் அழைப்பின் பேரில் கையெழுத்திட்ட ஒப்பந்தம், மாலத்தீவு பிராந்திய நீர்நிலைகள், ஆய்வு மற்றும் விளக்கப்படப் பாறைகள், தடாகங்கள், கடற்கரைகள், கடல்கள் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் போன்றவற்றை ஹைட்ரோகிராஃபிக் ஆய்வு செய்ய இந்தியாவை அனுமதித்தது.