உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி பி.வி சிவதாசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது. அங்கு கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர்.
மீட்பு
தொடர்ந்து 17-வது நாளாக (நவம்பர் 29ம் தேதி) மீட்புப் பணி நடைபெற்ற நிலையில், மாலையில் தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதன்பின்னர், ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அனைவருடன் நலமுடன் இருப்பதாகவும், அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.
கோரிக்கை
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ (எம்)) எம்.பி பி.வி சிவதாசன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுளளார். நேற்று திங்களன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய எம்.பி பி.வி சிவதாசன், இந்த சம்பவம் மிகவும் வேதனையானது என்றும், நிறுவனம் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள், விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியுள்ளது என்றும், சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் (NHIDCL) நிறுவனம் உருவாக்கி வருகிறது. அதேவேளையில், ஐதராபாத்தை தளமாகக் கொண்ட நவயுகா இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் (Navayuga Engineering Company Ltd) நிறுவனம் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.