நாகலாந்துக்கு எதிராக மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, கிரிக்கெட் வாழ்க்கையில் தனது சிறந்த பதிவுகளை எடுத்து அசத்தியுள்ளார். 22-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு, ஜெய்ப்பூர், ஆமதாபாத், சண்டிகார், மும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகளில் இருந்து வெற்றி பெறும் 2 அணிகள் கால்இறுதியை எட்டும்.
இந்நிலையில், மும்பையில் நடந்த 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு - நாகலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நாகலாந்து தமிழக அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 69 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளும், சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.தொடர்ந்து 70 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய தமிழக அணி 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள தமிழக அணி 5வது வெற்றியை பதிவு செய்தது.
மிரட்டல் பவுலிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய தமிழக அணியின் சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, கிரிக்கெட் வாழ்க்கையில் தனது சிறந்த பதிவுகளை (கேரியர் பெஸ்ட்) எடுத்து அசத்தியுள்ளார். அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் 9 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அத்துடன் 3 மெய்டன்களை வீசிய அவர் நாகாலாந்து பேட்டிங் வரிசையை கதிகலங்க செய்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது ஐந்து விக்கெட்டுக்கள் இதுவாகும்.வருண் சக்ரவர்த்தி விஜய் ஹசாரே 2023 தொடரில் 6 ஆட்டங்களில் இருந்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.