சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது காயம் குறித்தும், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் நீண்ட கால கேப்டனாக திகழ்ந்து வருகிறார் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி. இவரது தலைமையிலான சி.எஸ்.கே அணி ஐ.பி.எல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூட்டியுள்ளது.
இந்நிலையில், 17வது ஐ.பி.எல் (2024) தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 18 அல்லது 19ம் தேதியில் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளிலும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? என்கிற கேள்வி ஏராளமான ரசிகர்கள் மனதில் தொற்றிக்கொண்டுள்ளது. ஏன்னென்றால், முந்தைய சீசனில் காயத்துடன் களமாடிய தோனி அதனைப் பொருட்படுத்தாமல் தொடர் முழுதும் விளையாடி அணியை கோப்பை முத்தமிட உதவினார். தொடருக்குப் பிறகு, அவரது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். தொடர்ந்து ஓய்வில் இருந்தும் வருகிறார்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது காயம் குறித்தும், அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்தும் நிகழ்ச்சியில் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோனி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் தோனிக்கு இடதுபுறமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த தொகுப்பாளர் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வுபெற்றுவிட்டார் என்று கூறினார்.
அப்போது தோனிக்கு அருகில் வலதுபுறமாக இருந்த நபர், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறி தவறை திருத்தினார். அதற்கு தோனியும் ஆம் என்று கூறி சைகை காட்ட அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகத்துடன் கரகோஷம் எழுப்பினர்.
அதன்பின் தோனியின் காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து கேள்வி கேட்டகப்பட்ட நிலையில், அப்போது பேசிய தோனி, "அறுவை சிகிச்சைக்கு பின் காயத்தில் இருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால் இன்னும் குணமடையவில்லை. மருத்துவர்கள் நவம்பர் மாதத்தில் முழுமையாக குணமடைவேன். என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அன்றாட வழக்கத்தில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறினார்.