தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்குப் பிறகு பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 2 நாட்களுக்கும் மேலாக அதிகனமழை பெய்தது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கிடையே தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 17 ஆம் தேதியில் சாத்தான்குளம் பகுதியில் கொட்டும் மழையில் ஜே.சி.பி. எந்திரத்தில் சென்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்டவைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அங்கிருந்து ஏரல் பகுதிக்கு சென்றார். அப்போது கனமழை காரணமாக ஏரல் தாமிரபரணி ஆறு பாலம் மூழ்கியது. ஏரல் பகுதியின் சாலை பகுதிகள் முழுவதும் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து தடைபட்டது. தொலை தொடர்பு சாதனங்கள் இயங்கவில்லை. இதனால் மீட்பு பணிக்கு சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 3 நாட்களாக ஏரலில் சிக்கி கொண்டார்.இந்நிலையில், கடந்த 3 நாட்களாக தனது வீட்டிலேயே சிக்கியிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டர். அவரை காவல்துறை அதிகாரிகள், மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.