சென்னை, பெசன் நகரில் உள்ள கடையில் பெண்கள் கும்பல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சேலைகளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயவாடாவை சேர்ந்த 6 பெண்கள் கொண்ட குழு சென்னை பெசன் நகரில் உள்ள துணிக்கடையில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள சேலைகளை அக்டோபர் 28ம் தேதி திருடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பதிவான சி.சி.டி.வி பதிவுகளில், இந்த கும்பலை சேர்ந்த பெண்கள் துணிகளை எடுத்து காட்டும் கடை ஊழியர்களிடம் பேசுகின்றனர். மற்றவர்கள் அந்த நேரத்தில் சேலைகளை எடுத்து தங்களது, சேலைகளுக்குள் மறைத்து வைத்துகொள்கின்றனர். இந்த கும்பலை சேர்ந்த 6 பேரும் சேலை அணிந்துள்ளனர்” என்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த கும்பல் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இவர்கள் விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என்று சந்தேகம் சென்னை காவல்துறையினருக்கு வந்துள்ளது. இதனால் விஜயவாடா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விஜயவாடா காவல்துறையினர் செய்த விசாரணையில் அந்த கும்பலை கண்டறிந்துள்ளனர். ஆனால் தங்கள் மீது வழக்கு ஏற்படாமல் இருக்க, திருடிய புடவைகளை அந்த கும்பல் அனுப்பிவைத்துள்ளது. இதை விஜயவாடா காவல்துறையினர், சென்னையில் உள்ள சாஸ்திரி நகர் காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் அனுப்பி வைத்த புடவைகளின் மதிப்பு ரூ. 7 லட்சம் ஆக உள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த கும்பல் பண்டிகை காலங்களில், நகரங்களுக்கு பயணித்து இதுபோன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாக விஜயவாடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கும்பலை கைது செய்ய சென்னை காவல்துறையினர் தீபாவளிக்கு பிறகு விஜயவாடா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.