மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னை வருகிறது மத்திய குழு; பல்வேறு இடங்களில் 2 நாட்கள் ஆய்வு நடத்த திட்டம்,மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் மத்திய குழு சென்னை வருகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது.
இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை விட்டு 5 நாட்கள் ஆகியும், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடியவில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.அதேநேரம், முதல்வர் ஸ்டாலின் உட்பட, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைவரும் மழைநீர் தேங்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர்.
மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இந்தநிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை மறுநாள் (டிசம்பர் 11) மத்திய குழு சென்னை வருகிறது. சென்னை வரும் மத்திய குழு பல்வேறு இடங்களில் 2 நாட்கள் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வரும் செவ்வாயன்று, தலைமைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.