இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் விக்ரமனின் மனைவி கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வரும் நிலையில், இது குறித்து தகவல் அறிந்த முதல்வர் ஸ்டாலின் அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து மருத்துவ குழுவினர் விக்ரமனின் வீட்டிற்க சென்றுள்ளனர்.
இயக்குனர் பார்த்திபனிடம் புதிய பாதை என்ற படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்து பின்னாளில் 1990-ம் ஆண்டு வெளியான புது வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரமன். 4 ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் நட்பின் மீதான மரியாதையை விளக்கும் படமாக வெளியான புது வசந்தம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன்பிறகு கோகுலம், புதிய மன்னர்கள், பூவே உனக்காக, சூரியவம்சம், வானத்தை போல,உன்னை நினைத்து, பிரியமான தோழி, மரியாதை, நினைத்தது யாரோ உள்ளிட்ட பல ஃபீல்குட் படங்களை கொடுத்துள்ளார். விக்ரமன். குறிப்பாக இவர் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் நடிகர் விஜய்க்கு பெரிய வெற்றிப்படமாகவும், குடும்ப ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரும் பெயரையும் பெற்று தந்தது.
அதேபோல் வானத்தை போல, சூரிய வம்சம், உன்னை நினைத்து உள்ளிட்ட படங்கள் தமிழக அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இதனிடையே விக்ரமன், கடந்த 2014-ம் ஆண்டு நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கியிருந்தார். அதன்பிறகு கடந்த 9 வருடங்களாக திரைத்துறையில் இருந்து விலகியுள்ள விக்ரமன், உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனது மனைவியை கவித்து வருகிறார்.
இது குறித்து சமீபத்திய நேர்காணல்களில் விக்ரமன் பகிர்ந்துகொண்ட நிலையில், விரைவில், தான் மீண்டும் திரைத்துறையில் ரீ-என்டரி கொடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே விக்ரமன் தனது மனைவி குறித்து சமூகவலைதளங்களில் வெளியிட்ட பதிவுகள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு சென்ற நிலையில், அவர் விக்ரமனின் மனைவிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 15 மருத்துவர்களுடன் இயக்குனர் விக்ரமனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவிக்கு பரிசோதனை செய்து தொடர் சிகிச்சைக்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்னர். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.