இந்தியாவில் இன்று ஒரே நாளில் விஜயபுரா (கர்நாடகா), செங்கல்பட்டு (தமிழ்நாடு), ராஜ்கோட் (குஜராத்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய 4 இடங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6:52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை 7:39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
தொடர்ந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங்-கில் காலை 08:46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதுஇதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 9:00 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.