புதுச்சேரிக்கு புதிய சட்டமன்றம் அவசியம்; புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.மாநிலத்தில் என். ஆர். காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் செய்து வருகிறோம்.
காரைக்காலில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.சுற்றுலாவை மேம்படுத்த அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது. மேலும் புதுச்சேரியில் காலியாக உள்ள அமைச்சர் பதவி விரைவில் நிரப்பப்படும்.மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். புதிய சட்டமன்றம் கட்டுவது அவசியம். விரைவில் சட்டமன்றம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.