சென்னையில் இருந்து சென்ற சார்மினார் ரயில் ஹைதரபாத் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்ட விபத்தில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட சார்மினார் ரயில் இன்று காலை 9 மணியளவில் கடைசி நிறுத்தமான ஹைதராபாத் நம்பள்ளி ரயில் அருகே சென்ற போது ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி தடம் புரண்டன.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளான S2 மற்றும் S3 பெட்டிகள் தடம் புரண்டதால் எஞ்சின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.இருந்தாலும் அதிகாலை நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த சில பயணிகள் தங்களது பெர்த்தில் இருந்து கீழே விழுந்தனர். இதில் சில பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவருக்கும் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ரயில் விபத்து காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விபத்து குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.