மருத்துவ கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (நவ.22) மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே சோதனை நடந்த போது சில அறைகள் சீல் வைக்கப்பட்டன. சீல் வைக்கப்பட்ட அறைகளை திறந்து அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வந்த புகாரில் பேரில் சோதனையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, அவருக்கு தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம், சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறை சோதனையில் என்னிடமிருந்து எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்று கூறினார்.
இந்நிலையில், இன்று (நவ.22) திருவண்ணாமலையில் அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். மேலும் இது சோதனை அல்ல என்றும் ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை கல்லூரி அறையில் வைத்து சீல் வைத்து சென்றனர். இந்நிலையில் அதை கண்காணித்து சரிபார்ப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு வழக்கமான நடைமுறை என்றும் கூறியுள்ளனர்.