தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் இளங்கலை பல் மருத்துவ இடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 80% அளவிற்கு குறைந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.1,950 BDS இடங்களில், 2022 இல் 557 இடங்கள் காலியாக இருந்த நிலையில், சிறப்பு கவுன்சிலிங்கிற்குப் பிறகு 2023ல் 122 காலியாக உள்ளன.
"நீட் தேர்வு (NEET) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 6% க்கும் குறைவான காலியிடங்களைப் பதிவு செய்வது இதுவே முதல் முறை. 2017 ஆம் ஆண்டில், மாநில கவுன்சிலிங் மூலம் வழங்கப்படும் 1,760 BDS இடங்களில் 46% இடங்கள் காலியாக இருந்தன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது 40% ஆக இருந்தது. 2022 இல் காலியிடங்கள் 30% ஆக குறைந்தது” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார் என TOI செய்தி வெளியிட்டுள்ளது.
”மாநில கவுன்சலிங் கமிட்டி சுயநிதி கல்லூரிகளுடன் சேர்ந்து காலியிடங்களைக் குறைக்கும் திட்டத்தை உருவாக்கியது. மேலும், பெரும்பாலான சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் அதிகபட்ச இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு ஒப்படைத்தன. இந்தக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் 2.5 லட்சமாக இருந்தது. பல கல்லூரிகள் அதை மேலும் 1 லட்சமாக குறைத்துள்ளன. எனவே, பெரும்பாலான மாணவர்கள் பி.டி.எஸ் படிப்பில் சேர விரும்பினர்,” என்று அந்த அதிகாரி கூறினார்.மேலும், புதுக்கோட்டையில் புதிய பல் மருத்துவக் கல்லூரியை சுகாதாரத் துறை திறந்திருப்பதால் பல் மருத்துவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மேம்படும் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது, மேலும் தமிழ்நாடு இப்போது 38 மாவட்டங்களில் 32 இல் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது. ஆனால், புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு முயற்சி எடுக்கவில்லை. 1952-53 இல் நிறுவப்பட்ட சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்தும் வரை 100 இளங்கலை இடங்களைக் கொண்ட ஒரே மருத்துவக் கல்லூரியாக இருந்தது.இந்திய பல் மருத்துவக் கவுன்சிலின் கூற்றுப்படி, தமிழ்நாட்டில் 32 பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, இதில் 21 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ளன.